விபத்தால் 50 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த - மதுரை-நத்தம் மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம் : விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தில் நடந்த விபத்தை தொடர்ந்து 50 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பாலத்தின் கட்டுமானப் பணி மீண்டும் தொடங்கியது.

மதுரை–நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பாண்டியன் ஓட்டல் அருகிலிருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நாராயணபுரம் அருகே நடந்த விபத்தில், இணைப்புச்சாலைக்காக பிரதான தூணில் நிறுத்தப்பட்ட கான்க்ரீட் தூண் கீழே விழுந்ததில் உத்தரப்பிரதேச மாநிலத் தொழிலாளி ஆகாஷ்சிங் என்பவர் இறந்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து 3 அமைச்சர்கள், மதுரை ஆட்சியர், ஐஐடி குழுவினர் என பல்வேறு தரப்பிலும் விசாரணை நடந்தது. போலீஸார் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான முடிவு தெரியும் வரையில் பாலப்பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பாலப் பணிகள் நடக்கவில்லை. மக்களின் சிரமங்களை குறைக்க சாலை அமைத்த பிறகே பாலம் கட்ட வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இதையடுத்து சாலை, இருபுறமும் வாய்க்கால், நடைபாதை அமைக்கும் பணி மட்டும் கடந்த 50 நாட்களாக நடந்தன. இதில் 70 சதவீத சாலைப் பணிகள் முடிந்துள்ளன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாலப்பணிகள் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

இது குறித்து கண்காணிப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ கான்கிரீட் தூணை தூக்கி நிறுத்தும் போது ஜாக்கியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் எனத் தெரிந்தது. பாலம் கட்டுமானத் தரத்தில் குறையில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான தூண்களில் இணைப்பு பாலங்களை முழுமையாக பொருத்தினால் மட்டுமே இருபுற சாலைப் பணியையும் முடிக்க முடியும்.’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்