சமூகத்தில் இன்று அதிக பாதிப்பில் உள்ள விவசாயிகளின் வாழ்வு, அதிகாரிகள் கருணை காட்டினால் மட்டுமே மேம்படும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.
தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் மூலம்கிடைக்கும் மானிய திட்டங்களின் விவரங்கள் அடங்கிய கையேட்டினை ஆட்சியர் வெளியிட விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் ஆட்சியர் பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 866.2 மி.மீ மழை பெய்தது. நடப்பு ஆண்டில் தற்போது வரை 715.1 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 16 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 59 ஆயிரத்து 344 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வேளாண் தேவைகளுக்கு ஏற்ப தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றின் விதைகள், உரங்கள் போன்றவை போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவையானவற்றை பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து தமிழக விவசாயிகள்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, தமிழர் உழவர் பேரியக்கம் அமைப்பின் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வேலுசாமி, முன்னோடி விவசாயிகள் சிவலிங்கம், பாலு உள்ளிட்ட பலரும் நோயால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிருக்கு இழப்பீடு, நீர்ப்பாசன திட்டங்கள், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை அரசு சார்பில்ஒருங்கிணைத்து மேம்படுத்துதல், கூடுதல் மழைப்பொழிவை உருவாக்கும் வகையில் வனங்களில் பசுமை அடர்த்தியை அதிகரிக்கும் திட்டங்கள், அலைக்கழிப்பின்றி விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும், ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு வழங்கி விவசாயம் காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
குறிப்பாக, முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, ‘சமூகத்தில் இன்று பல்வேறு காரணங்களால் அதிகம் பாதிப்பில் உள்ளவர்கள் விவசாயிகள் தான். அரசுத் துறை அதிகாரிகள் கருணை காட்டினால் மட்டுமே அவர்களின் வாழ்வு மேம்படும்.
எனவே, விவசாயிகளின் நியாயமான, அவசியமான கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்றித் தர உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் உதவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட ஆட்சியர், கோரிக்கைகளை ஆய்வு செய்து சாத்தியமுள்ளவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் வசந்தரேகா, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் மருத்துவர் வேடியப்பன், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் மாலினி, வேளாண் விற்பனை, வணிகம் துணை இயக்குநர் கணேசன், அரூர் கோட்டாட்சியர் முத்தையன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சீனிவாச சேகர், மீன்வளத் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணி, பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago