2022-23-ல் நெல்லை மாவட்டத்துக்கு - ரூ.6,877 கோடி கடன் வழங்க இலக்கு : நபார்டு வங்கிக் கடன் திட்ட அறிக்கை வெளியீடு

திருநெல்வேலியில் நபார்டு வங்கியின் 2022-23-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரூ. 6,877.85 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி ஆண்டு தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வருகிறது. இதில் வளத்தின் அடிப்படையில் முன்னுரிமை துறைகளான விவசாயம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீடு, கட்டமைப்புகளுக்கான பொது முதலீடுகள், சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி போன்றவற்றுக்கு அளிக்கப்படும் கடன் அளவிடப்படுகிறது.

அதன்படி 2022-23-ம் ஆண்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை நபார்டு வங்கி தயாரித்து உள்ளது. அதில் வங்கிக் கடன் ரூ. 6,877.85 கோடியாக அளவிடப்பட்டு உள்ளது. 2021-22 -ல் நிர்ணயிக்கப்பட்ட கடன் வளத்தை விட இது10 சதவீதம் அதிகம்.

திருநெல்வேலி மாவட்டத்துக் கான வளம் சார்ந்த கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்டார். நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் எப்.சலீமா, முதன்மை மாவட்ட மேலாளர் ஆர். கிரேஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விவசாயம், பண்ணையம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வீடு மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு சென்ற ஆண்டை விட மிக அதிகமாக தற்போது கடன் அளவு மதிப்பிடப்பட்டுள்ளது.

குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2,635.80 கோடியும், வேளாண் தொழில் சார்ந்த, விவசாய கட்டமைப்புகள், உணவு மற்றும் பயிர் பதனிடு தொழில்கள் காலக்கடனாக ரூ.1,900.82 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீடு ரூ.627.45 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி ஏற்றுமதி கடன் ரூ.53.25 கோடி, கல்விக்கு ரூ.241.31 கோடி , வீடு கட்டுமானக் கடன்கள் ரூ.264.95 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.108.76 கோடி, சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்கு கடனாக ரூ.759 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதிக வளம் இருப்பதால், அனைத்து வங்கிகளும் அதிக அளவில் விவசாயத்துக்கு குறுகிய காலக்கடன் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சலீமா தெரிவித்தார். நபார்டு வங்கி தலைமை மேலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2,635.80 கோடியும், வேளாண் தொழில் சார்ந்த, விவசாய கட்டமைப்புகள், உணவு மற்றும் பயிர் பதனிடு தொழில்கள் காலக்கடனாக ரூ.1,900.82 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE