சட்டப்படியான காரணம் இன்றி பணி வரன்முறை விவகாரத்தில் அனுதாபம், உணர்வுகள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம், ஆரல்வாய் மொழியைச் சேர்ந்தவர் பி.தேவி, பெருமாள்புரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேரப் பெருக்குநராக 1989-ல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அரசு துறைகளில் பத்தாண்டுகள் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்தவர்களை பணி வரன்முறை செய்ய, தமிழக அரசு 2006-ல் பிறப்பித்த அரசாணை அடிப்படையில், தன்னை முழுநேரப் பெருக்குநராக பணி வரன்முறை செய்து அனைத்து பணப்பலன்களையும் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில், அவரது மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பகுதிநேரப் பணியாளராக இருப்பதாகக் கூறி, பணி நிரந்தரம் செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில், பகுதிநேரப் பணியாளர்களுக்கும் அந்த அரசாணை பொருந்தும் என உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடியானது. இருப்பினும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசு 2006-ம் ஆண்டு அரசாணையை மாற்றி அமைத்து, 2013-ல் ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. அதில் பகுதி நேரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. பணி வரன்முறை விவகாரத்தில் சட்டப்படி உரிய தகுதி இல்லாத நிலையில் அனுதாபம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago