பிற கட்சிகளைத் தவிர்த்து விட்டு - திமுகவுடன் கூட்டணி வைப்பது எதற்காக? : சிதம்பரம் கூட்டத்தில் திருமாவளவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

பிற கட்சிகளை விடுத்து திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிவைப்பது எதற்காக என்று சிதம்பரத்தில் நடந்த சமூக நீதிக்கானசமூகங்களின் ஒற்றுமை நிகழ்ச்சி யில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்பி விளக்கியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான திருமாவளவனின் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதிக்கான சமூகங்களின்ஒற்றுமை நிகழ்வு நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் நடந்தது.

நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் பாலஅறவாழி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிந் தனைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாக்குழு உறுப்பினர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்வில் திருமாவளவன் பேசி யது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சமூக நீதிக்கு எதிரான காய்களை நகர்த்தி வருகின்றனர். சமூக நீதியை அழிப்பதற்கான அனைத்தையும் செய்கின்றனர். சாதி வெறியைத் தூண்டி மத வெறியை வளர்க்கிறார்கள். அதனால் சமூகநீதிக்கான சங்கங் களை நாம் ஒருங்கிணைக்க வேண் டிய தேவை இருக்கிறது.

எந்த சாதியாக இருந்தாலும் கோயில் கருவறைக்குள் நுழைய முடியாது. பார்ப்பனர்கள் மட்டும் தான் கோயிலுக்குள் நுழைய முடியும் என்று இருந்தது. ‘எல்லோ ரும் இந்து’ என்கிறார்கள். ஒரு தரப்பினர் கோயிலுக்கு உள்ளேயும், மற்றவர்கள் வெளியேயும் நிற்பது தான் சனாதனம். ‘எந்த சாதியாக இருந்தாலும் ஆகம விதிகளை கற்றுக்கொண்டால் கருவறைக்குள் நுழைய முடியும்’ என்கிற கோட் பாடுதான் சமூகநீதியாக இருக்க முடியும்.

பிற்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு தரும்போது இந்தியாவில் எந்த ஒரு தலித் சமூகமும் எதிர்க்கவில்லை. ராம்தாஸ் அத்வாலே, கன்ஷிராம், மாயாவதி உள் ளிட்ட எந்த தலைவர்களும் எதிர்க்கவில்லை. விடுதலைச் சிறுத்தை கள் கட்சி வரவேற்றது. ‘இன்னும்கூடுதலாக கொடுக்க வேண்டும்’ என்று கூறினோம். மருத்துவர் ராமதாஸை பார்த்து நான் கேட்கி றேன், ‘மண்டல் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்’ என்ற போது அதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடியது யார்? மண்டல்கமிஷன் பரிந்துரையை எதிர்த்து,வன்முறையில் ஈடுபட்டது பாஜக தான். அத்வானி தலைமையில் அன்றைக்கு மிகப்பெரிய வன்முறை நடந்தது. ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எதிரியா? அதை ஆதரித்தவர்கள் எதிரியா? எப்படி உங்களால் பாஜகவோடு செல்ல முடிகிறது. எப்படி ஆர்எஸ்எஸ் அமைப்புடன் உறவாட முடிகிறது.

இன்றைக்கு அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் அது அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்சியாகத் தான் இருந்திருக்கும். அதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை தமிழ்நாடு சந்தித்திருக்கும். அதை தவிர்க்கவே விடுதலைச் சிறுத்தைகள் திமுகவோடு கூட்டணி வைக்கிறது. தலித், பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இயக் கங்கள், சமூக நீதி சங்கங்கள் இந்தியா முழுவதும் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் 2024 மக்களவைத் தேர்தலில் மோடியை வீழ்த்த முடியும்.

மீண்டும் பாஜக ஆட் சிக்கு வர முடியாமல் தடுக்க முடியும் என் றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்