உரிய பராமரிப்பு செய்யாததால் - உடையும் தருவாயில் பிரெஞ்சு காலத்து படுகை அணை : உயிர் கொடுக்குமா புதுச்சேரி அரசு?

By செய்திப்பிரிவு

தமிழக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து புதுச்சேரியில் உள்ள படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. ஏரி, குளங்களும் நிரம்பத் தொடங்கியுள்ளன.

அதேநேரத்தில் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு நூறாண்டு பழமையான படுகை அணை இடியும் தருவாயில் உள்ளது. பல ஆண்டுகளாக அணையின் நிலை மோசமானதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் 20 கிராம மக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர்.

புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016-ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணை சேதமடைந்தது. அப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்வப்போது மழைக் காலங்களில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்படும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் வழிந்தோடியதால் அப்பகுதி திடீர் சுற்றுலா தலமாகவும் மாறியது. ஏராளமான மக்கள் குவிந்தனர். அதைத்தொடர்ந்து பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக படுகை அணையில் மேலும் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலில் கலப்பதால் படுகை அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறுகையில், “பிரெஞ்சுக்காரர்கள் கட்டித் தந்த நூறாண்டு பொக்கிஷமான இந்த அணையை சீர்செய்து தர செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம் உட்பட இருபது கிராம மக்கள் அரசிடம் மனு அளித்தோம். மழைக் காலங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்குகிறார்கள். தற்போது 60 சதவீதம் வரை அணை சேதமடைந்துவிட்டது. ஆறு மாதம் வரை தேங்கியிருக்க வேண்டிய தண்ணீர் தற்போது வழிந்தோடிவிட்டது. 20 கிராமங்களின் நிலத்தடி நீர் உயரவும், விவசாயத்துக்கு உதவும் இந்த அணையை சீர்செய்ய அதிகாரிகளும், அரசும் மறுக்கின்றனர். கடும் மழைப்பொழிவு இனிமேல் தான் இருக்கும். அதிக தண்ணீர் வரத்து இருந்தால் இந்த அணை இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. அணை உடைந்தால் 20 கிராமங்களில் விவசாயம், குடிநீர் முற்றிலும் பாதிக்கப்படும். கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்த இடம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது” என்றனர்.

செட்டிப்பட்டு படுகை அணை

நிரம்பியதால் மகிழ்ச்சி

அதேநேரத்தில் சங்கராபரணி ஆற்றில் செட்டிப்பட்டு - திருவக்கரை இடையே கட்டப்பட்டுள்ள புதிய படுகை அணை முழுமையாக நிரம்பி வழிகிறது. பருவமழை தீவிரமடைவதற்கு முன்பே படுகை அணை நிரம்பியுள்ளதால் செட்டிப்பட்டு, திருவக்கரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், “முன்பு படுகை அணை இல்லாததால் தண்ணீர் இல்லாமல் விவசாயிகளும், மக்களும் கஷ்டப்பட்டோம். தற்போதே தண்ணீர் நிரம்பி வழிவதால் பத்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது. விவசாயமும் நன்றாக நடக்கிறது. தடுப்பணையை உயர்த்தி தந்தால் இன்னும் பலன் அதிகரிக்கும்” என்றனர்.

படுகை அணையில் நீர் நிரம்பியுள்ளதால் அதனை காண பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் அணையை ஒட்டி சிலர் மது அருந்திவிட்டு படுகை அணையில் இருந்து தண்ணீர் வழியும் இடத்தில் பாட்டில்களை உடைத்துவிட்டு செல்வதால் மக்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்