பவானி உயிர் உரம் உற்பத்தி மையம் மூலமாக, நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் உயிர் உரம் உற்பத்தி மையத்தில், திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யும் பணி மற்றும் மாநில அரசு விதைப்பண்ணையில் தூயமல்லி நாற்றுகள் நடவு செய்யும் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
இந்த மையத்தில் அசோஸ்பைரில்லம்-நெல், அசோஸ்பைரில்லம்-இதரம், ரைசோபியம்-பயறு, ரைசோபியம்-நிலக்கடலை மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் ஆண்டுதோறும் 250 மெ.டன் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் திரவ உயிர் உரம் உற்பத்தி மையம் ஏற்படுத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பவானி மாநில அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி 4 ஏக்கர் பரப்பளவிலும், அறுபதாம் குறுவை 3 ஏக்கர் பரப்பளவிலும் விதை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது.
பவானி வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான நெல், நிலக்கடலை, எள், பயறு வகை விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் ஆகிய இடுபொருட்கள், விவசாயிகளுக்கு மானிய விலையில் இம் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 110 டன் நெல் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி, துணை இயக்குநர் ஆர்.அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago