குழந்தைத் திருமணத்தை தடுக்க கூடுதல் கவனம் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

குழந்தைத் திருமணத்தை தடுக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்படும். மேலும், கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லம், அய்யந்திருமாளிகையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், காந்தி ரோடு பகுதியில் உள்ள பிந்தா பெண் குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன் கூடுதல் கவனம் செலுத்தப்படும். தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்த உள்ளோம்.

குழந்தைத் திருமணத்தை தடுக்க ஏற்கெனவே கிராமங்கள், ஒன்றியங்கள், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள்உள்ளன.

பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் ஆகியவை வழங்க ரூ.762 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் திருமண உதவித் தொகையை மோசடியாக பெற 46 விண்ணப்பங்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க கிராம சேவிகா, முக்கிய சேவிகா போன்றோருக்கு ஆன்ட்ராய்டு போன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆன்ட்ராய்டு போன் மூலம் திருமண உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் வீடு, திருமண நிகழ்வு ஆகியவற்றை போட்டோ எடுத்து, பதிவு செய்ய வேண்டும். மேலும், திருமண பதிவு உள்ளிட்ட ஆவணங்களும் பெறப்படும். தமிழகத்தில் 21 குழந்தை தத்தெடுப்பு மையங்கள் உள்ளன. அவற்றில், குழந்தைகள் தத்தெடுப்பு முறையாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி, சேலம் ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்