உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளது. இதனால் அத்தொழிலை சார்ந்த குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில் சங்கர் நகர், ராமசாமி நகர், ஆலாம்பாளையம், எரிசினம்பட்டி உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுண்ணாம்பு தயாரிக்கும் தொழிலை பூர்வீகமாக கொண்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமப்புறங்களில் குளங்கள், தரிசு நிலங்களில் கிடைக்கும் வெள்ளை ஓடைக் கற்களைக் கொண்டு சுண்ணாம்புக் கல் தயாரிக்கப்படுகிறது. அதற்கென பிரத்யேகமாக 10 அடி முதல் 20 அடி வரை காளவாய்கள் அமைக்கப்படுகின்றன. தென்னை மரத்தின் பாளை, மட்டை, தேங்காய் மட்டை ஆகியவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன.
பொங்கல், தீபாவளி என பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது மட்டுமின்றி, மழை நீர் கசியாமலும், கடும் வெயிலில் இருந்து வீட்டை பாதுகாக்கும் வகையிலும் வீட்டின் மேற்கூரையில் சுருக்கிப் போடவும், தரைத்தளத்தில் பதிக்கும் கற்கள் தயாரிக்கவும் சுண்ணாம்புக் கற்கள் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. கால்சியம் சத்து குறைவான கால்நடைகளுக்கும் கல் சுண்ணாம்பை ஊற வைத்து, அதன் தெளிந்த நீரை மருந்தாக பருகவைக்கும் நடைமுறை இன்றளவும் கிராமங்களில் கால்நடை வளர்ப்போரால் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:
இத்தொழிலுக்கு அடிப்படை மூலப்பொருள் சுண்ணாம்புக் கல் மற்றும் விறகு. இவை இரண்டுமே ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இவை இரண்டையுமே பாதுகாக்க முடியவில்லை. அதிக அளவு இருப்பு வைக்க குடோன் வசதியோ, அதிகமாக கொள்முதல் செய்யும் அளவுக்கு பொருளாதார வசதியோ கிடையாது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பொதுமக்கள் பலரும் வீடுகளுக்கு சுண்ணாம்பு பூசுவது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் தான் கொஞ்சமாவது வியாபாரம் நடைபெறும். மழையால் தற்போது மொத்தமும் முடங்கியுள்ளது. ஏற்கெனவே இத்தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரவால் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய நிலையில் இத்தொழிலை நம்பி இருப்பவர்களையும், இயற்கை சூழ்நிலை, தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago