தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, மண்ணின் மக்கள் மட்டுமே எழுதும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
2017-ல் தமிழ்நாட்டில் உள்ளஅரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில், தமிழ் தெரியாதவெளிமாநிலத் தவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றனர். இவ்விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் இன்னும் பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டதோடு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, வரும் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடத்தவுள்ளதாக ஆசிரியர் பணித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இத்தேர்வில், வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க மீண்டும் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி களில் விரிவுரை யாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ் வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும்.
கர்நாடகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், அம்மாநிலங்களில் மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட , ‘தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் தேர்வெழுதலாம்’ என்ற விதி இன்றும் மாற்றப்படாமல் இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மறுத்தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தவரும் தேர்வு எழுதும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago