கடலரிப்பைத் தடுக்கும் வகையில், வானூர் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் ரூ. 14.5 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க இருப்பதாக ஆட்சியர் மோகன், அப்பகுதி மீனவர்களிடையே தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பத்தை அடுத்துள்ளது பிள்ளைச்சாவடி மீனவ கிராமம். இங்கு தொடர்ந்து கடலரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் வீடு மற்றும் படகுகள் சேதமடைகின்றன. கடலரிப்பின் தாக்கத்தை குறைக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதி மக்கள் இதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இப்பகுதி மீனவ மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மீன்வத்துறையின் வாயிலாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடி ஒதுக்கிட கருத்துரு சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. அரசாணை பெறும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே இப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மோகன் இத்தகவலை அங்குள்ள மீனவர்களிடையே கூறினார்.
கருங்கற்களால் ஆன தூண்டில் வளைவு அமைத்து வழங்கிட துரித நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஹரிதாஸ், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் தூண்டில் வளைவுக்காக கருங்கற்கள் கொட்டப்படும் பட்சத்தில் கடலரிப்பு பெரிதும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago