நமக்கு நாமே திட்டத்தில் - ஈரோட்டில் 10 வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் விருப்பம் : மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாநகராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 10 வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பங்களிப்புடன் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் நமக்கு நாமே திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களது பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளைத் தேர்வு செய்து, தங்களது பங்களிப்பை வழங்கினால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

உதாரணமாக ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10 லட்சம் செலவாகும் என்றால், அந்த பகுதி மக்கள் அதற்கான செலவில் பாதித் தொகையை, அதாவது ரூ.5 லட்சம் கொடுக்க முன்வந்தால், நமக்கு நாமே திட்டப்படி மாநகராட்சி நிர்வாகம் தனது பங்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து அப்பணியை மேற்கொள்ளும்.

இத்திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில், குடியிருப்பு நலச் சங்கத்தினர், பொது அமைப்பினர், தொழிலதிபர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. கூட்ட முடிவில், ஈரோடு சக்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக தாங்கள் பாதி தொகையை வழங்க மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து திண்டல் பகுதியில் பூங்காவுக்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, கரூர் சாலைப் பகுதியில் கழிவு நீர் சாக்கடை அமைப்பது உள்ளிட்ட 10 பணிகள் மேற்கொள்ள அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதற்கான ஒப்புதல் கேட்டு அரசுக்கு திட்ட மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்