சென்னிமலை பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ.250 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை மற்றும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னிமலை பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் காயத்ரி இளங்கோ, பேரூராட்சி செயல் அலுவலர் அ.ஆயிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago