ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - 169 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன : வடகிழக்கு பருவமழையை நம்பியுள்ள ராஜாதோப்பு அணை

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 169 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை மட்டும் இன்னும் முழுமையாக நிரம்பாமல் உள்ளது.

தமிழக-ஆந்திர எல்லை மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளான கவுன்டன்யா, பொன்னை, மலட்டாறு, மண்ணாறு, அகரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழையால் அதிகப்படியான மழை பெய்துள்ளது.

இதனால், வரும் ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது என கூறப்படுகிறது.

மேலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் இதுவரை 40 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 75%-க்கும் அதிகமாக 7 ஏரிகள், 50 முதல் 75% வரை 7 ஏரிகள், 25 முதல் 50% வரை 8 ஏரிகள், 25%-க்கும் குறைவாக 39 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் இதுவரை 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 20 ஏரிகளில் 75%-ம், 51 ஏரிகளில் 50 முதல் 75%-ம், 92 ஏரிகளில் 25 முதல் 50% அளவுக்கும் நிரம்பியுள்ளன.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 16 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 2 ஏரிகளில் 75%, 3 ஏரிகளில் 50 முதல் 75%, 5 ஏரி களில் 25 முதல் 50% அளவுக்கு நிரம்பியுள்ளன.

இதில், பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் 75% மற்றும் 50% நிரம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முழு கொள்ளளவை எட்டிய ஏரிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாறு படுகையில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 169 ஏரிகள் முழு கொள்ளளவும், 29 ஏரிகளில் 75% அளவுக்கும், 61 ஏரிகளில் 50 முதல் 75% அளவுக்கும், 105 ஏரிகளில் 25 முதல் 50% அளவுக்கும் நிரம்பி யுள்ளன. 155 ஏரிகளில் 25%-க்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது.

அணைகள் நிலவரம்

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்க அணையான மோர்தானா 37.72 அடி உயரம் கொண்டது. இதில், 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை முழு கொள்ளளவை ஏற்கெனவே எட்டிவிட்டது.

அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான கவுன்டன்யா வனப்பகுதியில் இருந்து நேற்று காலை நிலவரப்படி 579 கன அடி அளவுக்கு அணைக்கான நீர்வரத்தாக உள்ளது. அணை நிரம்பி இருப்பதால் 579 கன அடி தண்ணீரும் கவுன்டன்யா ஆற்றில் உபரி நீராக வெளியேறி வருகிறது.

வேலூர் மாவட்டத்தின் இரண்டாவது நீர்த்தேக்க அணையாக காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை உள்ளது. 24.57 அடி உயரம் கொண்ட அணையின் முழு கொள்ளளவு 20.52 மில்லியன் கன அடியாகும். அணையில் தற்போது 18.70 அடி உயரத்துடன் 10.06 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்புள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை என்பதால் எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.24 அடி உயரம் கொண்டது. இதில், 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அணைக்கு வந்து கொண்டிருக்கும் 43.79 கன அடி நீரையும் உபரியாக வெளி யேற்றப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்