திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில்35 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஆதியூர் மங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(51). இவர், செவ்வாத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (46). குனிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் உயர்கல்வி படித்து வரும் தங்களது மகளை பார்க்க தம்பதியினர் கடந்த 15-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு பெங்களூருவுக்கு சென்றனர். நேற்று மாலை இருவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பின்வாசல் கதவு திறந்து கிடந்தது.
படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவை சோதனையிட்டபோது, அதில் வைத்திருந்த தங்கத்திலான தாலிசரடு, வளையல், கம்மல், மோதிரம் என 35 பவுன் எடை யுள்ள தங்க நகைகளும், 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், பித்தளை பொருட்கள் என ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
தலைமை ஆசிரியர் வீட்டில் இல்லாததை அறிந்துக்கொண்ட மர்ம நபர்கள் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் கேசவன் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago