ஓசூர் கெலவரப்பள்ளி அணையில்2-வது நாளாக நீர் திறப்பு அதிகரிப்பு :

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 839 கனஅடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 1068 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக வசிக்கும் கிராமமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திமலை, தும்கூர், பெங்களூரு ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தென்பெண்ணைஅணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போதைய நீர் மட்டம் 41 அடி. அணைக்கு விநாடிக்கு 839 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2-வது நாளாக விநாடிக்கு 1068 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், ஆற்றைக் கடந்து செல்லவும் முயற்சி செய்யக்கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கிராமமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் தண்டோரா அடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணை

தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையாலும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி நேற்று காலை விநாடிக்கு 1632 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையில் உள்ள 3 சிறிய மதகுகள் வழியாக பாசன கால் வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 1506 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் மழை மற்றும் நீர் வரத்து 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரிக்கும்பட்சத்தில் பிரதான மதகுகளில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE