நெல்லை அரசு மருத்துவமனையில் - உலக விபத்து காய தினம் விழிப்புணர்வு :

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டு தோறும் அக்டோபர் 17-ம் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடற்காயத்தால் உண்டாகும்மரணத்தை தவிர்க்க கையாளவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவுத் துறை சார்பில் நடைபெற்ற விபத்துதடுப்பு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அவசர சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் டாக்டர் முகமது ரபி மற்றும் உதவி முதல்வர் டாக்டர் சாந்தாராம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பால சுப்பிரமணியம் மற்றும் பிற மருத்துவத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் செவிலியர் பயிற்சி மற்றும் பாராமெடிக்கல் மாணவ- மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் தலைமையில் உடல் காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவு உதவி மருத்துவர்கள் பிரதீப், சாமுவேல் ஆகியோர் தலைமையில், உயிருக்கு போராடி மரண தருவாயில் இருப்போருக்கு இதய இயக்க மீட்பு (CPR) செய்முறை பயிற்சி பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. பேராசிரியர் டாக்டர் ஐரின் நன்றி கூறினார். செவிலியர் பயிற்றுநர் செல்வன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE