வள்ளியூர், பணகுடி உட்பட 8 பேரூராட்சிகளுக்கு - ரூ.271 கோடியில் புதிய குடிநீர் திட்டம் : சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், பணகுடி உட்பட 8 பேரூராட்சிகளை உள்ளடக்கி ரூ. 271 கோடியில் புதிய குடிநீர் திட்டம் ஓராண்டு காலத்துக்குள் செயல்படுத்த இருப்பதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

வள்ளியூர் பேரூராட்சி பகுதியில்தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் அகற்றப்பட்டு புதிதாக ரூ.12 கோடியில் பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது,பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தினசரிச் சந்தையும் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் புதிதாககட்டப்பட உள்ளது. இந்த இடங்களை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் பார்வையிட்டார். தற்காலிக கடைகள் அமைக்கப்படும் இடம் மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் 500 வீடுகள் கட்டப்பட உள்ள இடத்தையும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது:

வள்ளியூரில் 5 ஏக்கர் இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 500 வீடுகள் கட்டப்பட உள்ளது. ஒரு வீட்டின் மதிப்பு ரூ.10 லட்சம் ரூபாயாகும். மக்களின் பங்களிப்பாக ஒரு வீட்டுக்கு ரூ. 1.50 லட்சம் மட்டுமே பெறப்படும். தகுதியான நபர்களுக்கு இங்கு வீடு வழங்கப்படும். இதுபோல் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே செயல்படும் தினசரி சந்தையில் உள்ள 132 கடைகள் அகற்றப்பட்டு 1 ஏக்கர் 42 சென்ட் இடத்தில் ரூ.4.80 கோடியில் நவீன முறையில் கடைகள் கட்டப்பட உள்ளது. கடைகள் கட்டும் பணி 6 மாதத்தில் முடிவடைந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும். பேருந்து நிலையமும் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படுகிறது.

வள்ளியூர் பகுதியில் குடி தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பணகுடி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பராமரிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இது போதுமானதாக இல்லை.

எனவே வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட 8 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ. 271 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் 65 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்