கனமழை காரணமாக ஆம்பூர் வட்டத்தில் - மழைநீரால் சூழப்பட்ட பகுதிகளை மீட்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்புப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இது தவிர தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியிலும், வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அங்கிருந்து வரும் மழைநீர் ஆம்பூரையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, ஆம்பூர் வீராங்குப்பம், ரெட்டித்தோப்பு, கன்னிகாபுரம், கீழ்முருங்கை, குளிதிகை ஜமீன், அகரம், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆம்பூர் அடுத்த வீராங் குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் கூறும்போது, "வீராங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர் மழைநீரால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. இங்கு, 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைத்து தெருக் களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

ஒரு சில தெருக்களில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதயேந்திரம் ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, சின்னப்பள்ளிக்குப்பம் ஏரி, மலையாம்பட்டு ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இந்த உபரி நீர் மலையாம்பட்டு, கன்னம்பட்டு, குமாரமங்கலம் வழியாக தேவலாபுரம் அடுத்த காமராஜபுரம் பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றில் இருந்து பாசன கால்வாய் வழியாக வரும் தண்ணீர் வீராங்குப்பம் ஓம் சக்தி நகர் குடியிருப்புப்பகுதியை சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது.இதனால், விஷப்பூச்சிகளும், பாம்புகளின் நடமாட்டம் எங்கள் பகுதியில் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். அவர்களும் எங்கள் பகுதியை பார்த்துவிட்டு சென்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கால்வாயை அகலப்படுத்த வேண்டும், கழிவுநீர் கால்வாய் இல்லாத தெருக்களில் உடனடியாக கழிவுநீர் அமைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது.

எனவே, எங்களது தேவைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும், தேங்கி யுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்