சாதாரண மக்களுக்கான அரசாக இல்லை - மோடி அரசு பெரு முதலாளிகளுக்கான அரசாக உள்ளது : மார்க்சிஸ்ட் கம்யூ. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றச்சாட்டு

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது நகர மாநாடு நேற்று நடைபெற்றது. மூத்த உறுப்பினர் ஞானமணி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். இதில்15 பேர் கொண்ட நகர்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். நகர் குழு செயலாளராக எஸ்.ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இதில், சிதம்பரம் நகரில் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மாற்று இடம் தராமல் அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைவருக்கும் கட்டணமின்றி சிகிச்சை வழங்க வேண்டும். உயிர் காக்கும் சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். சிதம்பரம் நகர் முழுவதும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த உ. வாசுகி கூறியதாவது:

7 ஆண்டு கால மோடி அரசு கார்ப்பரேட்களுக்கான அரசாக தான் இருக்கிறது.

சாதாரண மக்களுக்கான அரசாக இல்லை. உலக பட்டினி குறியீட்டில் உள்ள 116 நாடுகளில் ஏற்கெனவே 94-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101 வது இடத்திற்கு சரிந்திருக்கிறது.

அதானி, மோடி அரசுக்கு முன்பு வரை பணக்காரர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இன்றைக்கு ஆசியாவிலேயே 2-வது இடத்தில் அவர் இருக்கிறார். அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்காகத்தான் இந்த அரசு இருக்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்