முறையான நிர்வாக மேலாண்மை இல்லாததால் தள்ளாட்டத்தில் தவிக்கும் பிஆர்டிசி : பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் கடந்த 1988-ல் பிஆர்டிசியால் (புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம்)போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துநர் உள்பட 800 நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பிஆர்டிசி பேருந்துகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் முறையான நிர்வாக மேலாண்மை இல்லாதது, முறைகேடுகள், பேருந்துகளை சரியாக பராமரிக்காதது, நேர மேலாண்மையில் தொய்வு உள்ளிட்ட குறைபாடுகளால் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுகின்றனவா? என்பது கேள்விக்குறியாகி வருகிறது. லாபகர வழித்தடங்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படுவதாக பேச்சும் உள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலையில் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் பழுது ஏற்பட்டும், போதிய வருவாய் இல்லாதது, எப்சி எடுக்காதது போன்ற பல்வேறு காரணங்களாலும் நிறுத்தப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு சேதமாவதால் மீண்டும் இயக்க முடியாத நிலைக்கு மாறியுள்ளன.

இதுதொடர்பாக பிஆர்டிசி ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘பிஆர்டிசி பேருந்துகள் புதுச்சேரியின் உள்ளூர் பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டன. மொத்தம் 141 பேருந்துகள் இயங்கின. கடைசியாக ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில் 10 வால்வோ பேருந்துகள், மினி பேருந்துகள் உள்பட 50 பேருந்துகள் 2014-ல் வாங்கப்பட்டு 2015-ல் இயக்கி வைக்கப்பட்டன. அதன் பிறகு புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை. இதனால் பல ஆண்டுகளாக தொலைதூர வழித்தடங்களில் பழைய பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை, கடலூருக்கு இயக்கப்பட்ட 10 ஏசி பேருந்துகளும், நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட 2 பேருந்துகளும், மாஹே, திருப்பதிக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் தலா ஒன்றும், விழுப்புரத்துக்கு இயக்கப்பட்ட 4 பேருந்துகளும் என பலதொலைதூர பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர உள்ளூர்பேருந்துகள் பலவும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏற்கெனவே புதுச்சேரியில் 90 பேருந்துகள் இயங்கின. இதில் தற்போது சுமார் 40 பேருந்துகள் தான் இயங்குகின்றன. காரைக்காலில் 35 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சுமார் 19 மட்டுமே இப்போது ஓடுகின்றன. இதுபோல் மாஹே, ஏனாமிலும் சொற்ப பேருந்துகளே இயங்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் பல பேருந்துகள் பழையது என்பதால் பழுதடைந்து நின்றுவிட்டன.

மேலும், பல வழித்தடங்களில் முக்கிய சந்திப்புகள், பேருந்து நிறுத்தங்களில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்வது இல்லை. குறிப்பாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் சிதம்பரம், சீர்காழிக்கும், நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் திருச்சி,விருதுநகர் பேருந்து நிலையத்துக்குள்ளும், மாஹே பேருந்து சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை.

நகர பேருந்துகளில் முன் பின் செல்லும் தனியார் பேருந்துகளிடம் பணம் பெறுவதும், முறைகேடுகளில் ஈடுபடுவதும் மிகப்பெரிய காரணமாக உள்ளது. பல பேருந்துகள் காலாவதியாகி எப்சி எடுக்காதது, தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாகி வருகின்றன. அதுமட்டுமின்றி நிர்வாக சீர்கேடு, வருவாய் இழப்பு, முறைகேடுகள், திறமையான அதிகாரிகள் இல்லாதது போன்றவைகளால் தொடர்ந்து பிஆர்டிசி வருவாயை இழந்து தள்ளாடும் நிலைக்கு வந்துள்ளது.

எனவே திறமையான அதிகாரிகளை நியமனம் செய்து பிஆர்டிசியில் உள்ள பிரச்சினைகளை களைந்து, புதிய பேருந்துகள் வாங்குவது, புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவதன் மூலமாக மட்டுமே தள்ளாட்டத்தில் உள்ள பிஆர்டிசியை நிலைநிறுத்த முடியும்” என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்