மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியுடன் புறநகரில் உள்ள 28 வார்டுகள் 2011-ம் ஆண்டில் இணைக்கப்பட்டன. இந்த வார்டுகளில் தெரு விளக்கு வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளன. 50 சதவீதத் தெருக்களுக்கு இதுவரை தார் சாலை வசதி இல்லை. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சில வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
பாதாளச் சாக்கடை இணைப்பு முழுமையாக இல்லாத நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் அரசு ரூ.600 கோடி ஒதுக்கியது. இதில் மதுரை வடக்கு பகுதியைச் சேர்ந்த 13 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணி ரூ.293.37 கோடியில் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.
நாராயணபுரம், பாங்க் காலனி, அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், விளாங்குடி, வண்டியூர் எனப் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்க தெருக்களில் சுமார் 100 அடி இடைவெளியில் பெரிய தொட்டிகள் பதிக்கப்படுகின்றன. அனைத்து தொட்டிகளும் குழாய்கள் மூலம் இணைக்கப்படுகின்றன. இதற்காக 8 அடிக்கும் அதிக ஆழத்தில் தெரு முழுவதும் நீளமான குழிகள் தோண்டப்படுகின்றன. இவற்றை உடனே மூடியும் விடுகின்றனர்.
எனினும் தெருவின் நடுவில் தோண்டப்படும் குழியால் சாலை சுமார் 4 அடிக்கும் கீழே பள்ளமாகி விடுகிறது. மழைக் காலத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேரும், சகதியுமாக மாறிவிடுகிறது.
சாலையின் இரு ஓரங்களும் அரை அடி வரையில் சீரற்ற நிலையில் மேடாகி விடுகிறது. இது போன்ற தெருக்களில் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் மிகவும் சிரமப்பட்டே செல்ல வேண்டியுள்ளது. விரைவில் புதிய சால அமைக்கப்படும் என்ற நம்பிக்கையில் சில மாதங்களாக இந்த சிரமங்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். எனினும் புதிய தார் சாலை அமைக்க இன்னும் ஓராண்டு வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.
இது குறித்து பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறியதாவது:
அனைத்து தெருக்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டதும், கழிவுகள் சீராக வெளியேறுகிறதா என வெள்ளோட்டம் பார்க்கப்படும். இப்பணி வெற்றிகரமாக முடிந்த பின்னரே வீடுகளிலிருந்து பாதாள சாக்கடை தொட்டிகளுக்கு இணைப்பு வழங்கப்படும். அப்போதும் தெருக்கள் தோண்டப்படும். மேலும் முல்லை பெரியாறு அணையிலிருந்து குழாய் மூலம் மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது. இந்த தண்ணீரை விரிவாக்கப் பகுதிகளுக்கு விநியோகிக்க மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் குடிநீர் இணைப்பு தேவைப்படுவோருக்கு விரைவில் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதற்காகவும் சாலைகளை தோண்ட வேண்டும். இப்பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே தெருக்களில் புதிய தார்சாலை அமைக்கப்படும். இதற்கு ஓராண்டுக்கும் மேல் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் சாலையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் சிரமங்கள் குறையும் என்றனர்.
இவ்விஷயத்தில் மாநகராட்சி தனிக் கவனம் செலுத்தி, பணிகளை விரைவுபடுத்தவும், சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago