ரயில் போக்குவரத்துக்கான - 100 ஆண்டு பழமையான பயணச்சீட்டு இயந்திரங்கள் : காட்சிப்படுத்திய அதிகாரிகளை பாராட்டிய மதுரை ரயில்வே கோட்டம்

By என்.சன்னாசி

சுமார் 100 ஆண்டு பழமையான ஓடும் ரயிலுக்கான கருவிகள், அட்டை பயணச்சீட்டு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை இளைய தலைமுறையினருக்காக காட்சிப்படுத்திய அலுவலர்களை மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் பாராட்டினார்.

இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: ரயில்வே துறையில் பழங்காலத்தில் பயன்படுத்திய பழைய சாவி எனப்படும் மர வளையங்கள், நீல்ஸ் வட்ட வடிவ தட்டையான டோக்கன்கள், தண்டவாள பாயிண்டுகளில் பொருத்தப்பட்ட திரி விளக்குகள், மண்ணெண்ணெய் சைகை விளக்கு, தண்டவாளத்தில் ரயில் உள்ளதா, இல்லையா எனக் காண்பிக்கும் கருவிகள், சைகை கைகாட்டி, விளக்கு ஒளிரிகள், ரயில் நிலையத்துக்குள் ரயில் என்ஜின்களை இயக்க மெட்டல் டோக்கன், பனிக்காலத்தில் ரயில்களை அவசரமாக நிறுத்த ‘ப்யூசி’ என அழைக்கப்படும் மத்தாப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களை மாற்ற கையால் சுற்றும் மண்ணெண்ணெய் விளக்கு, ரயில் வருவது புறப்படுவது பற்றி அறிவிக்க உதவிய 1922-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல மணி, எந்த ரயில் பாதையில் ரயில் வருகிறது என்பதை பாயின்ட்ஸ்மேனுக்கு தெரிவிக்க உதவும் சாவிகள், பழைய அட்டை பயணச்சீட்டுகளுக்கு தேதி அச்சிடும் இயந்திரம், அட்டை பயணச்சீட்டுடன் பயணிகளை நிலையத்துக்குள் அனுமதிக்க, பயன்படுத்தப்பட்ட அட்டை பயணச்சீட்டுகளை ரத்து செய்ய பயன்பட்ட நிப்பர்கள் ஆகியவற்றை வருங்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் மதுரை கோட்டத்திலுள்ள கேரள மாநில கொட்டாரக்கரா ரயில் நிலையத்தில் சிறிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பழங்காலப் பொருட்களை கொட்டாரக்கரா நிலைய கண்காணிப்பாளர்கள் வி.ஏ.பிஜிலால் மற்றும் ஏ.முனிநாரயணன் ஆகியோர் சேகரித்து சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனைப் பாராட்டி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்கப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்