பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி ஒப்பந்தம் மார்ச் மாதம் காலாவதியாகிவிட்டதால், விரைவில் புதிய ஒப்பந்தம் செய்ய வேண்டும், என மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டம் பள்ளிபாளையத்தில், தலைவர் கே.மோகன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.அசோகன், பொருளாளர் எஸ்.முத்துக்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
நாமக்கல் மாவட்டம் முழுவதும் விசைத்தறி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, 9.5 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். இதனை, தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்தாண்டை விட கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும்
பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட 10 சதவீதம் கூலி உயர்வு இரண்டாண்டுக்கு வழங்குவது என்ற ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. எனவே, அப்பகுதி விசைத்தறி உரிமையாளர்கள் உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி, புதிய கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago