முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பி.எட் படித்த பிறகு கூடுதலாக இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக, கடந்த 7-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. அதில், இளங்கலையில் ஏதேனும் ஒரு படிப்பு முடித்துவிட்டு, பி.எட் படித்த பிறகு, கூடுதலாக இளங்கலை அல்லது முதுகலை படித்தவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் 2020-21-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நியமனம் செய்வதற்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தமிழ்வழி பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், பல விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்றும், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் பெறுவதற்கு வரும் 31-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி கூறும்போது ‘‘முந்தைய அறிவிப்பால் பல தேர்வர்கள் பாதிக்கப்படும் சூழல் இருந்தது. மென்பொருளில் மாற்றம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நீட்டிப்பு என்பது தேர்வர்களுக்கு அனுகூலமான விஷயமாகும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago