சுற்றுலாவை மேம்படுத்த புதிய சுற்றுலா கொள்கையை தமிழக அரசு வரையறுத்து வருகிறது என சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில், தென்னிந்திய ஹோட்டல் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். இதில் மாநில சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:
கடந்த 2017-18 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்ததில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய சுற்றுலா கொள்கையை தமிழக அரசு வரையறுத்து வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும். சூழல் சுற்றுலாவுக்காக மாநிலத்தில் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், உதகையில் காமராஜர் சாகர் அணை, உதகை படகு இல்லம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பபட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளை அணைப்பகுதிகள் அதிகம் ஈர்க்கின்றன, எனவே இந்த அணைகளில் படகு சவாரி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மற்றும் ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிற இடங்களுக்கு இணைப்பு ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகள் பறவையின் பார்வையில் பூமியைக்காண முடியும். இதற்கான ஆய்வு மேற்கொள்ள பட்ஜெட்டில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைபோல முட்டுக்காடு மற்றும் முதலியார் குப்பம், உதகை படகு இல்லம் ஆகிய பகுதிகளில் படகு வீடுகள் அமைக்கப்படும். கேபிள் கார் திட்டம் வணிகரீதியாக சாத்தியப்படுமா என ஆய்வு செய்யப்படும். உதகையில் கோல்ப் விளையாட்டு சுற்றுலாவை ஊக்கப்படுத்தினால், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். வால்பாறை, பொள்ளாச்சி, உதகையில் தேயிலை, காபி சுற்றுலாவை ஏற்படுத்தினால், காபி சாகுபடி மற்றும் உற்பத்தி குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசினார். ஹோட்டல் சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago