திருச்சி மாநகரிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்து போலீஸார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் மாநகர பகுதிகளில் ரோந்து சென்றபோது, பல்வேறு இடங்களிலுள்ள பேருந்து நிழற்குடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், சுகாதாரமின்றியும் காணப்பட்டன. எனவே, பயணிகள் அந்த இடங்களில் நிற்காமல் சில அடி தூரம் தள்ளி நிற்பதும், அதன்காரணமாக பேருந்துகளும் அவற்றுக்குரிய நிறுத்தங்களில் நிறுத்தப்படாமல், சற்று தொலைவில் நிறுத்தி எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மாநகரிலுள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூய்மைப்படுத்தி அந்த இடங்களில் மட்டும் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதையடுத்து டிவிஎஸ் டோல்கேட்டில் மன்னார்புரம் செல்லும் சாலையிலுள்ள பேருந்து நிறுத்தம், புதுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸார் நேற்று தூய்மைப்படுத்தினர். அந்த பேருந்து நிறுத்தங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், அனைத்து பேருந்துகளும் உரிய நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபோல மாநகரிலுள்ள மற்ற பேருந்து நிறுத்தங்களிலும் அடுத்தடுத்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago