தி.மலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகளை கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு செயலாளருமான தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, கூடுதல் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 18 வட்டாரங்களுக்கு துணை ஆட்சியர்கள் நிலையில் 18 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றக் குழு, நிவாரண மையம் மற்றும் தங்குமிடம், மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிக்கு ஆணையாளர்கள் நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். இதற்கான கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077 அல்லது 04175-232377 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். அதேபோல், 3 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், 12 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்கள் தங்களது ஆன்ட்ராய்டு செல்போனில் TNSMART என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிவழியாக மழை, இடி போன்ற முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago