ஆயுதபூஜையை முன்னிட்டு - வேலூரில் களை கட்டிய வியாபாரம் : காற்றில் பறந்த கரோனா விதிமுறைகள்

By செய்திப்பிரிவு

ஆயுதபூஜையையொட்டி வேலூரில் வியாபாரம் நேற்று களைக்கட்டியது. கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் ஒரே இடத்தில் அதிக இடங்களில் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

நவராத்திரி விழாவின் நிறைவாக ஆயுதபூஜையும், அதனைத்தொடர்ந்து விஜயதசமி விழாவும் தமிழகத்தில் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆயுதபூஜையும், நாளை விஜயதசமி விழாவும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆயுதபூஜை நாளில் வீடுகளை சுத்தப்படுத்தி, நாம் பயன்படுத்தும் வாகனம், வீட்டில் அடிக்கடி கையாளும் பொருட்களை சுத்தப்படுத்தி அவற்றிற்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுடைய புத்தகம், நோட்டு, கணினி ஆகியவற்றை பூஜையில் வைத்து வழிபட்டால் சரஸ்வதி அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி திருநாளையொட்டி பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க வேலூர் மார்க்கெட் மற்றும் பஜார் பகுதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக நேற்று குவிந்தனர். லாங்கு பஜார், மெயின் பஜார், மண்டித்தெருக்களில் சிறு, குறு வியாபாரிகள் சாலையோரம் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஆயுதபூஜை என்பதால் பூக்கள், பழங்கள், காய்கறிகளின் விலை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. அதேபோல, பொரிக்கடலை, வெற்றிலை பாக்கு, சந்தனம், கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி, பூசணிக்காய் ஆகியவற்றின் விலையும் நேற்று அதிகரித்து இருந்தது.

விலை ஏற்றம்

விலை ஏற்றமாக இருந்தாலும் வேறுவழியின்றி பூஜைக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச்சென்றனர். வேலூர் லாங்கு பஜார், மெயின் பஜார் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று காற்றில் பறக்கவிடப்பட்டன.

பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்ற அரசின் உத்தரவை யாரும் பின்பற்றாததால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்