பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் பொதுசுகாதாரப் பணியில் 1,700 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் தற்காலிக பணியாளர்களாக 1200 பேர் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி பொதுசுகாதாரப் பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்கக் கூடாது. 480 நாட்களுக்கு மேல் பணி முடித்த தற்காலிக பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக நிரந்தரப் பணியாளர்களும் ஈடுபட்டதால், ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணி மற்றும் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து டிஆர்ஓ முருகேசன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago