விலங்குகள் வதைப்படுத்துவதைத் தடுக்க - மிருகவதை தடுப்புக் குழு அமைக்க வேண்டும் : தமிழக இந்து மக்கள் முன்னணியினர் மனு

By செய்திப்பிரிவு

விலங்குகள் வதைப்படுத்துவதைத் தடுக்க மிருகவதை தடுப்புக் குழு அமைக்க வேண்டும் என தமிழக இந்து மக்கள் முன்னணியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்னி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழக இந்து மக்கள் முன்னணியின் நிறுவன தலைவர் தமிழ்செல்வன் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் விலங்குகள் வதைப்படுத்துதல் ,சித்ரவதை செய்தல் ஆகியவற்றில் இருந்து விலங்குகளை பாதுகாக்கும் வகையில் மிருகவதை தடுப்புக் குழுஅமைக்க வேண்டும். வாகனங்களில் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவைகளை சட்ட விரோதமாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நாள்தோறும் ஏற்றிச் செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சோதனைச் சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சட்டவிதிமுறைகளை மீறுவோர் மீது, கால்நடைத்துறை, காவல் துறை, வருவாய் துறை ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுத்து விலங்குகளை பாதுகாத்திடவேண்டும்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்படுவதையும் தடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

241 மனுக்கள் அளிப்பு

அந்தியூர் வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அளித்த மனுவில், அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சொந்த பயன்பாட்டுக்காக கார் வைத்திருப்பவர்கள், காரை வாடகைக்கு இயக்கி வருகின்றனர். இதனால், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும்உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி கார்களை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் வியாபாரி வைரவேல் அளித்த மனுவில், காய்கறி மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு என்று கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும், எனத் தெரிவித்துள்ளார். இவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 241 மனுக்கள் அளிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்