சாமி சிலைகளை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டவர் உணவு உண்ண மறுத்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் உபகோயிலான பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மற்றும் பெரியாண்டவர் கோயிலில் உள்ள சாமி சிலைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் நடராஜன் என்கிற நாதன்(37) என்பவரை கடந்த 8-ம் தேதி பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் இருந்த நாதன், தான் குற்றம் செய்யவில்லை என்று கூறி, தன்னை விடுவிக்க வலியுறுத்தி சிறையில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்துள்ளார். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நாதனை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போலீஸார் நேற்று சேர்த்தனர். அங்கும் அவர் தொடர்ந்து சாப்பிட மறுத்ததுடன் சிகிச்சைக்கும் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரான சார்பு நீதிபதி லதா நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, நாதனிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago