அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் - மாணவர்களுக்கான கல்வித் திறனை மேம்படுத்த செயல் ஆராய்ச்சி : புதுக்கோட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டம்

By செய்திப்பிரிவு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆசிரியர்களைக் கொண்டு செயல் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான வரைவு ஒப்படைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வித் திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக மாவட்டத்தில் இருந்து 20 ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி, பாடத்தை எளிதாக புரிய வைத்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஒரு மாதம் செயல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அதில், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை செயல்படுத்துவது குறித்து அரசு முடிவெடுக்கும்.

இதற்கான வரைவு ஒப்படைப்புக் கூட்டம் புதுக்கோட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, முதுநிலை விரிவுரையாளர் ஜி.முருகன் தலைமை வகித்தார்.

செயல் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ள ஆசிரியர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பின் நோக்கம் குறித்து விளக்கினர். கூட்டத்தில், பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்