காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என பள்ளிபாளையம் நகராட்சி 21-வது வார்டு அங்காளம்மன் கோயில் தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு அங்காளம்மன் கோயில் தெரு காவிரிக் கரையையொட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விசைத்தறி மற்றும் கட்டிட வேலை என தினக்கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் சிறிய அளவிலான ஓட்டு வீடுகளாக உள்ளன.
காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில் நகராட்சி, வருவாய் துறையினர் மூலம் இப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காவிரியில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்காளம்மன் கோயில் வீதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கின.
அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு அருகே இருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தண்ணீர் வடிந்த பின்னர் மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு மக்கள் திரும்பினர். இச்சூழலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கனமழை பெய்தபோது குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஆற்று நீர் மற்றும் மழை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளதால் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என அங்குள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அங்காளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். கூலி வேலை செய்து வருவதால் வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் அளவிற்கு வசதியில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தபோது, மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. வெள்ளப்பெருக்கு, மழைவெள்ளம் ஏற்படும் சமயங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் தண்ணீருடன் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.
வேறு வழியில்லாததால் எந்நேரமும் உயிர் அபாயத்துடன் வசித்து வருகிறோம். மாற்று இடம் வழங்குவதே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். குடியிருப்பை ஒட்டி காவிரி ஆறு உள்ளதால் தடுப்பு சுவராவது கட்டித்தந்தால் குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கும். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago