விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள - சைபர் க்ரைம் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் : சொந்த பயன்பாட்டை தடுக்க பிரத்யேக ஸ்டிக்கர்

By இ.ராமகிருஷ்ணன்

விரைந்து செயல்பட ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சைபர் க்ரைம் போலீஸாருக்கு விரைவில் இருசக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான வாகனங்கள் டிஜிபி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போலீஸார் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை தடுக்க பிரத்யேகமாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

உலகளவில் தொழில்நுட்ப வருகை காரணமாக, ஆன்லைன் வழியாக பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இதேபோல் சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றங்களும் அதிகரித்துள்ளன.

அதிலும், சமீபகாலமாக ஏ.டி.எம். கார்டு மோசடி, ஆன்லைனில் ஒருவர் வங்கியில் இருந்து அவருக்கு தெரியாமல் பணத்தை எடுப்பது, பேஸ்புக், வாட்ஸ்அப், ஆன்லைன் ஷாப்பிங், மேட்ரிமோனியல், போலி இ-மெயில், வங்கியிலிருந்து பேசுவதாக மோசடி, பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் என சைபர் குற்றங்களும் வெகுவாக அதிகரித்துள்ளன. மேலும் தனிநபர் தொடர்பான அவதூறுகள், வதந்திகளும் அதிக அளவில் பரபப்பப்படுகிறது.

2018-ம் ஆண்டு 27,248 ஆக இருந்த இணையவழி குற்றங்கள், 2019-ல் 44,546 ஆக உயர்ந்தது. இணைய வழியாக நடைபெறும் பாலியல் மோசடி, தனிநபர் பழிவாங்கல் போன்ற குற்றங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து புகார் வருகிறது. இதனால் சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 7 மாநகரங்களுக்கென தனியாக 7 சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இவை தவிர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஆகிய 3 பிரிவுக்கும் தலா ஒரு சைபர் க்ரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 46 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இங்கு காவல் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள போலீஸாருக்கு விரைவில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டிஜிபி அலுவலகத்தில் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

போலீஸார் சொந்த பயன்பாட்டுக்கு அந்த வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சைபர் க்ரைம் என வாகனத்தில் பிரத்யேக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்