பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, 1,000 கன அடி உபரி நீர் நேற்று திறக்கப்பட்டது.
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், 34.58 சதுர கி.மீட்டர் பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அம்மாபள்ளி அணையில் இருந்து 1,000 கன அடி நீர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை திறக்கப்பட்டது. இதனால், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர் வரத்து அதிகரித்தது.
நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 33.95 அடியாகவும், கொள்ளளவு 2,807 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
தற்போது பருவ மழையால் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
எனவே, அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மதியம் 1,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. 3 மற்றும் 13-வது மதகுகள் வழியாக தலா 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில், கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.
எனவே, நீர்த்தேக்கங்களில் இருந்து உபரிநீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஒதப்பை, நெய்வேலி, மணலி, மணலி புதுநகர், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அம்மப்பள்ளி அணை நிரம்பி வருகிறது. ஏற்கெனவே, 4 முறை அணையில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்ததால் அம்மப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அம்மப்பள்ளி அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெடியம், சாமந்தவாடா, பள்ளிப்பட்டு ஆகிய தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின.
இதற்கிடையே, கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago