விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க - கிராமம் தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

By செய்திப்பிரிவு

விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கிராமம் தோறும் விளையாட்டு மைதானம்ஏற்படுத்தப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடி கட்டும் பணியினை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

கோபியில் தினசரி அங்காடி கட்டும் பணிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்நகராட்சியில் பழைய கடைக்காரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடையினை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின்னர் தினசரி அங்காடி கடைக்காரர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கி கடைகளை காலி செய்து இடிக்கப்பட்டு, தற்போது பணி தொடங்கியுள்ளது.

இருதளங்களாக கட்டப்பட உள்ள தினசரி அங்காடி கட்டிடத்தின், அடி தளத்தில் 65 கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனமும் மற்றும் 85 இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையில் கட்டுமானம் செய்யப்படவுள்ளது. தரைத்தளத்தில் திறந்த வெளி கடைகளாக 72, இதர கடைகள் 30 என 102 கடைகள் கட்டப்பட உள்ளது. ஓராண்டிற்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோபியில், ரூ.52.08 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம், ரூ.32 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் மற்றும் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 9 பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பூங்கா, சாலை, நூலகம் என ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன

சாலை, கட்டிடம் என அரசுப் பணிகளை மேற்கொள்வோர், 100 சதவீதம் தரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதோடு, விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், தயார் செய்யவும், ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுத் திடல் அமைத்து அங்கு மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், கோபி நகராட்சி ஆணையர் ஜெ.பிரேம் ஆனந்த், கோட்டாட்சியர் பழனிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்