கூலியை உயர்த்தித் தரக்கோரி - கட்டைப் பை தயாரிப்பு தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் :

By செய்திப்பிரிவு

கூலி உயர்வு கோரி பவானி வட்டார கட்டைப் பை தயாரிப்பு பணியில்ஈடுபடும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தும் சணலால்தயாரிக்கப்பட்ட கட்டைப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும், வீடுகளில் இருந்தவாறும் குடிசைத்தொழிலாக கூலி அடிப்படையில் பைகளைத் தைத்துத் தருபவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சணல் கட்டைப்பைகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால், சணல் கட்டைப்பைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூலி உயர்வு கோரி சணல் கட்டைப்பை தயாரிக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பவானி வட்டார கட்டைப் பை தைக்கும் தையல் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

பவானி சுற்று வட்டாரப் பகுதியில் கட்டைப் பை தயாரிக்கும் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரியும் பெண்களாவர். தையல் இயந்திரம் பராமரிப்பு செலவு, நரம்பு விலை உயர்வு போன்றவை உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.

சுத்துப்பட்டி பை ஒன்றுக்கு ஒரு ரூபாயும், சைடு பட்டி பை ஒன்றுக்கு 75 பைசாவும், சதா பைக்கு 30 பைசாவும் கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 11-ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு, தொழிற்சங்க பிரதிநிதிகள், பை உற்பத்தியாளர்கள், முகவர்களைக் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்