திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் நல்.செல்லபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் தலைவர் நல்.செல்லபாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 220 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
13,500 மக்கள் நலப் பணியாளர்களை அதிமுக அரசு பழி வாங்கியதால், 32 ஆண்டுகளாக வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறோம். எனவே, திமுக தேர்தல் வாக்குறுதியின்படியும், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் எங்களுக்கு பணப்பலனுடன் கூடிய பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.
உயிரிழந்த மக்கள் நலப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்க வேண்டும். இதுதொடர்பாக நினைவூட்டும் வகையில் நவ.9-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago