தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய தகுதித் திறன் தேர்வுக்கான இணையவழி பயிற்சி நேற்று தொடங்கியது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய தகுதித் திறன் தேர்வு(NMMS) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மத்திய அரசால் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டு இந்தத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக மாணவர்களை வெற்றிபெறச் செய்யும் நோக்கத்துடன் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்டக் கல்வி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, திறமையான அனுபவமிக்க 60 ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, அவர்களுக்குரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்கு இணையவழியில் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் நேற்று தொடங்கிவைத்தார். அவரது வழிகாட்டுதல் மற்றும் நேரடி கண்காணிப்பில், மாவட்ட பயிற்சிக் கல்வி அலுவலர் பேபி, ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் வினோத் ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாகவும், பிற கல்வி மாவட்ட அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவன செயலியின் தொழில்நுட்ப பணிகளை அந்நிறுவன ஊழியர் மூக்கையா ஒருங்கிணைக்கிறார்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் கூறியபோது, “இந்த தேர்வில் பங்கேற்க 3 ஆயிரம் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago