விளையாட்டு வீரர்கள் குளிரான தட்பவெப்பநிலையை சமாளிக்க - ஊட்டியில் 40 ஏக்கரில் பயிற்சி மையம் : அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற டெல்டா மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கத் தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார், திருவாரூர் மாவட்ட தடகள சங்கத் தலைவர் சாக்கோட்டை க.அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக விளையாட்டு வீரர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கையையும் முதல்வர் மேற்கொண்டுள்ளார். விரைவில், வெளிநாட்டில் இருந்து பயற்சியாளர்கள் அழைத்து வரப்பட்டு, தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் நிலவும் குளிரான தட்பவெப்பத்தை சமாளிக்கும் வகையில், ஊட்டியில் 40 ஏக்கரில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்