ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் - நாளை காலை 7 மணி முதல் எண்ணப்படுகின்றன : வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை யொட்டி பதிவான வாக்குகள் நாளை காலை 7 மணிக்கு எண்ணப்படவுள்ளன. இதற்காக, 3 மாவட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடந்து முடிந்தன. வாக்குப்பதிவுக்கு பிறகு பதிவான வாக்குகள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் பாதுகாப் புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை (12-ம் தேதி) 7 மணி முதல் எண்ணப்படவுள்ளன. இதனையொட்டி, அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தில், வேலூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், காட்பாடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் காந்திநகரில் உள்ள வேலூர் அரசு சட்டக்கல்லூரியிலும், அணைக்கட்டு ஒன்றியத்துக்கான வாக்குகள் இறைவன்காடு பகுதியில் உள்ள அன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், கணியம்பாடி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், கணாதிபதி துளசி பொறியியல் கல்லூரியிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வித்யா லட்சுமி மெட்ரிக் பள்ளியிலும், குடியாத்தம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் என மொத்தம் 7 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், ஆற்காடு ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஆற்காடு ஜி.வி.சி.கல்வியல் கல்லூரியிலும், திமிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கலவை  ஆதி பராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஓச்சேரி  சப்தகிரி பொறியியல் கல்லூரி யிலும், நெமிலி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அரக்கோணம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள்  கிருஷ்ணா பொறியியல் கல்லூரி என மொத்தம் 7 மையங்களில் எண்ணப்படுகின்றன.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அக்ராகாரம் அரசு தொழில் நுட்ப கல்லூரியிலும், கந்திலி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள், கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யிலும், மாதனூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஆம்பூர் முஸ்லிம் ஆணைக்கார் ஓரியண்டல் அரபிக் பள்ளியிலும், ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படு கின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ் வாஹா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 4 வகையான வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

எனவே, நாளை காலை 7 மணிக்கு வாக்குபெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குச்சீட்டுகள் அனைத்து தனி டிரேவில் கொட்டப்பட்டு அதில், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் என 4 வகையான வாக்குச்சீட்டுகளை தனித்தனியாக பிரித்து பெட்டியில் அடுக்கி வைத்து அதன் பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை மாலை முதல் இரவுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்