காதலியுடன் வாழ ஆசைப்பட்டு - மனைவியை எரித்து கொலை செய்தேன் : காவல் துறையினரிடம் கணவர் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

காதலியுடன் வாழ ஆசைப்பட்டு மனைவியை எரித்துக் கொன்றேன் என கைதான கணவர், காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(30). இவரது மனைவி திவ்யா (24). இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதிமனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு குழந்தையுடன் தப்பிச் சென்றார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, சத்தியமூர்த்தி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குழந்தையுடன் தப்பிச்சென்ற சத்தியமூர்த்தியை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், தஞ்சாவூரில் காதலி அர்ச்சனா என்பவருடன் தனிக்குடித்தனம் நடத்திய வந்த சத்தியமூர்த்தியை காவல் துறையினர் கைது செய்து திருப்பத்தூருக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், காவல் துறை விசாரணையில் சத்தியமூர்த்தி தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:

ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்த நான், எனது மனைவியின் நெருங்கிய உறவினராக அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்தேன். இது தெரிந்த எனது மனைவி திவ்யா என்னிடம் சண்டையிட்டார். எனது காதலை கைவிடுமாறு என்னை வற்புறுத்தினார். இதனால், எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால், நான் எனது மனைவியை பிரிந்தேன். அவர் குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எனது காதலி அர்ச்சனா மனைவியை நிரந்தரமாக பிரிந்து வந்தால் நிம்மதியாக வாழலாம் என என்னிடம் கூறினார். அதனால், மனைவியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி எனது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்தேன். அதன்பிறகு நான் எனது மகளுடன் சென்னைக்கு தப்பிச்சென்றேன். திவ்யா உயிருடன் இருக்கும்போதே அர்ச்சனாவை நான் யாருக்கும் தெரியாமல் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். அதனால், தம்பதியாக எங்காயவது சென்று வாழலாம் என எண்ணி தஞ்சாவூர் சென்றேன். அங்கு நண்பர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்தேன்.

திருப்பத்தூரில் நான் இருந்த போது எனது பெயரில் ஒரு சிம்கார்டு வாங்கினேன். அந்த எண்ணில் இருந்து திருப்பத்தூரில் என்ன நிலவரம் என விசாரிக்க எனது நண்பர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சிக்னல் காட்டி கொடுத்தது. இதனால் காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்டேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அர்ச்சனா, குழந்தை வர்ஷிஜி ஆகியோர் காப்பத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்