திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நடமாடும் நேரடி கொள்முதல் நிலையத்தை தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்சிக்கு, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை எம்.பி எம்.செல்வ ராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், அமைச்சர் அர.சக்கர பாணி செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகளின் நலனை காக்கவும் அவர்களின் இடரை போக்கவும் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரிய விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது நெல்லை விற்பனை செய்யும்போது, அவர்களால் சிறு, சிறு விவசாயிகள் பாதிப் படையக் கூடாது என்ற உயரிய நோக்குடன் இந்த நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் மூட்டைக்கு மேல் வைத்து உள்ள விவசாயிகளிட மிருந்து அவர்களது இடத்துக்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்படும்.
அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு வட்டத்துக்கு தலா 1 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வீதம் 8 வட்டத்துக்கு 8 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, திருவாரூர் நவீன அரிசி ஆலை, தண்டலையில் உள்ள தனியார் அரிசி ஆலை களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் வண்டாம்பாளை யில் தற்காலிக நெல்சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான இடம் தேர்வு குறித்து ஆய்வு மேற் கொண்டார். கச்சனம் நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ராஜா ராமன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜ ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை மற்றும் நீர்மூளை ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாநில உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியது: நாகை மாவட்டம் முழுவதும் கஜா புயலின்போது, சேதமடைந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.
நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக அரிசி அரைவை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும். திருக்குவளை மற்றும் நீர்மூளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் முகப்பு சாலையை சீரமைத்து தரும்படியும், நெல் உலர்த்தும் இயந்திரம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
அமைச்சர் கடும் எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் நேற்று அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார்.
அப்போது, அரிசி ஆலையில் அரிசி மூட்டைகள் பயனற்று அடுக்கி வைக்கப்பட்டு, வீணாகியிருப்பது. சேதமடைந்த சாக்கு பண்டல்களையும் பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் உள்ள 21 நவீன அரிசி ஆலைகளில், சுந்தரக்கோட்டை அரிசி ஆலையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலையில், கடந்த ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டால் முழு உற்பத்தி திறனை எட்ட முடியவில்லை. இதுகுறித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும் மேலாண்மை இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அரிசி ஆலை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago