அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, ‘அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், விவசாயம், குத்தகைதாரர்கள், தச்சு வேலை, கல் குவாரி, முடிதிருத்துவோர், கூலித் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், பால் வியாபாரிகள், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை https://eshram.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்ய அனைத்து பொது சேவை மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும், இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.
தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துகொள்ள வயது வரம்பு 16 முதல் 59-க்குள் இருக்கவேண்டும், வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. இஎஸ்ஐ, பி.எப் பணியாளர்களாக இருக்கக்கூடாது. மேலும் பதிவு செய்வதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு மேற்கொள்ளலாம். பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளைப் பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இந்த தரவு தளத்தில் இணைத்துக்கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சமும், ஊனம் ஏற்பட்டால் ரூ.ஒரு லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்கப்படும், என தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago