ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு அமைப்பாளர்கள் கூட்டம் சி.எம்.நஞ்சப்பன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. உழவர் பயிற்சிநிலைய துணை வேளாண்மை இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பிமுன்னிலை வகித்தார். செயலாளர்பா.மா.வெங்கடாசலபதி வரவேற்று, உழவர் விவாதக்குழு செயல்பாடுகள் குறித்துப் பேசினார். பொருளாளர் கே.பி.அருணாச்சலம் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.
கோவை வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் பி.சரவணன் தொகுத்து எழுதிய மடல் மாணிக்கம், சுற்றுச்சூழல் தொழில்நுட்ப விழிப்புணர்வு செய்தி தொகுப்பை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி வெளியிட, உழவர் விவாதக்குழு அமைப்பாளர்கள் ஏ.பி.நடராஜன், ஈ.என்.ராமசாமி, ஆ.குணசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகமும், வேளாண் துறைக்கு தனிநிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும், நெல்கொள்முதல் மையங்களுக்கு பொது இடங்களில் கான்கிரீட் தளமும், மேற்கூரையும் அமைத்து நிரந்தரமான இடங்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில, மாவட்ட அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்பதுள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு வட்டார உழவர் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago