வாழை தோட்டத்து அய்யன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்ததாகக் கூறி, கோயில் உதவி ஆணையர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வாழை தோட்டத்து அய்யன் கோயில் உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் இந்துக்களின் முக்கியமான நாளாக கருத்தப்படும் மகாளய அமாவாசை தினத்தில் பக்தர்கள் கோயில்களில் கூடுவதற்கும், சாமி தரிசனம் மற்றும் தர்ப்பணம் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகாளய அமாவாசை நாளான நேற்று செரயாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த 10 பக்தர்கள், வாழை தோட்டத்து அய்யன் கோயிலில் சாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்த சென்றனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில், மூங்கில் தடுப்புகளை கோயில் நிர்வாகம் அமைத்து இருந்தது. பொங்கல் வைத்து வழிபட பக்தர்களுக்கு கோயில் ஊழியர்கள் அனுமதி மறுத்தனர்.
அப்போது அங்கு வந்த கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பக்தர்கள், கோயில் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் உடைக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர்.
இதுதொடர்பாக, கோயில் உதவி ஆணையர் மேனகா மங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், முருகேசன் மற்றும் நான்கு பக்தர்கள் குடும்பத்தினரிடம் மங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago