உலக அளவில் மருத்துவ ஜவுளி உற்பத்தியில் இந்தியா 2-ம் இடம் பிடித்துள்ளது என ஏஇபிசி தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.
அஜர்பைஜானில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள் இடையே இணைய வழியில் சந்திப்பு நடந்தது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் பாகுவில் உள்ள இந்திய தூதரகம் இணைந்து அஜர்பைஜானில் உள்ள வர்த்தகர்களுக்கும், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கும் இடையே ஒரு இணையச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் அஜர்பைஜானுக்கான இந்திய தூதர் வன்லால்வவ்னா பேசியதாவது:
இந்திய ஆயத்த ஆடைகளுக்கு நிலையான பெரும் தேவை உள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் உலக சந்தையை கைப்பற்ற, தங்கள் இருப்பை அதிகரிக்க வேண்டும். நாட்டில் பருத்தி ஆடைகள் மற்றும் நிலையான ஆடை பொருட்களுக்கு அதிக தேவை உள்ளது. உலகில் இருந்து அஜர்பைஜான் இறக்குமதி செய்யும் மொத்த ஆயத்த ஆடைகளில் இந்தியாவின் பங்களிப்பு 0.9 சதவீதமாகத்தான் உள்ளது. வங்கதேசம், சீனா, துருக்கி, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் சந்தையில் அதிக அளவில் உள்ளனர்.
எனவே சாத்தியமாக உள்ள வர்த்தகர்களுடனான தொடர்பின் அடிப்படையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் இருப்பை தொடர்வது முக்கியம். இவ்வாறு வன்லால்வவ்னா பேசினார்.
நிகழ்வில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர் ஏ.சக்திவேல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மேன் மேட் பைபர் ஆடைகளை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (பி.எல்.ஐ.) திட்டம் ஆகியவற்றால் மருத்துவ ஜவுளி உற்பத்தியில் இந்தியா உலகளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. பி.எல்.ஐ. திட்டம் விளையாட்டு ஆடைகள் மற்றும் விஞ்ஞான ஆடைகளை பெரிய அளவில் ஊக்குவிக்கும். ஆடைகளை தயாரிப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பு.
இவ்வாறு சக்திவேல் பேசினார்.
இதுபோல் தொடர்ந்து கூட்டங்கள் மற்றும் சந்திப்பு நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago