கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏட்டளவில் முன்னேற்பாடு பணிகள் - அடிப்படை வசதியின்றி மாற்றுத்திறனாளிகள், வாக்குச்சாவடிஅலுவலர்கள் தவிப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று திருக்கோவிலூர், திரு நாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 939 வாக்குச் சாவடிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதற்காக 7,751 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே, அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள மையங்களில் அதற்கான பணிகளை செய்து முடித்திட உத்தரவிட்டிருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.என்.தர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவே அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று விட்டனர்.

அங்கு அவர்களுக்கு குறிப்பாக பெண் அலுவலர்கள் கழிப்பறை, குளிப்பதற்கும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகாமையில் உள்ள வீடுகளுக்குச் சென்று, அவர்களிடம் மன்றாடி அவர்கள் வீட்டு கழிப்பறையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

போதாக்குறைக்கு முதல் நாள் இரவே வந்து விட்டதால், பள்ளி வகுப்பறைகளில் மின் விசிறி இயங்காததால், கொசுக்கடியில் இரவு முழுக்க தூங்க முடியாமல் அவதிப்பட்டதோடு, கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாததால் இயற்கை உபாதைகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெண் காவலர்கள் சிலர் உடைமாற்ற முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஊராட்சி செயலருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தாலும், அவர் அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்றனர்.

மேலும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக 3 சக்கர சைக்கிள் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்டாயம் இருக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

இச்சூழலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத் திறனாளி வாக்குசாவடிக்குள் செல்ல அங்குள்ள சிலரின் உதவியோடு தான் சென்று வாக்களிக்கும் நிலை உருவானது.

இதுகுறித்து அங்கிருந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் கேட்டபோது, 3 சக்கர சைக்கிள்இங்கு எதுவும் வைக்கப்படவில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE