செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ,செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சியில் துணை கிராமமாக துத்திப்பட்டு உள்ளது. துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 2,274வாக்களர்களும், பொன்னங்குப்பம் கிராமத்தில் சுமார் 1496 வாக்களர்களும் உள்ளனர். இந்நிலையில் பொன்னங்குப்பம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி நேற்று தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். இதனால் பொன்னங்குப்பம் கிராம வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரம் துத்திப்பட்டு கிராமமக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.
இதுகுறித்து பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் கூறுகையில், "துத்திப்பட்டு கிராமத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் இருப்பதால் அவர்கள் தொடர்ந்து பதவியை ஏலம் விடுகின்றனர். இதனால் மூன்று வார்டுகளை உள்ளடக்கிய பொன்னாங்குப்பம் கிராமத்தில், எந்த அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை அவர்களே தீர்மானம் செய்யும் நபர்களை போட்டியிட வைக்கின்றனர். எங்கள் கிராமத்தில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய 24 பேரும் மனுவை வாபஸ் பெற்றனர். எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்தோம்" என்றார்.
இதுகுறித்து துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல் கூறியது: 40 ஆண்டுகளாக பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் தான் போட்டியிட்டு வந்தனர். இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொன்னங்குப்பம் ஊராட்சியில் இருந்த துத்திப்பட்டு கிராமத்திற்கு எந்த வசதியும் இல்லாமல் இருந்தது. இதை மாற்ற நினைத்த நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம்.
குறிப்பாக, மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம் , அஞ்சல் அலுவலகம் என எங்கள் தேவைகள் அனைத்திற்கும் அங்கே செல்ல வேண்டிய நிலையிருந்தது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தனித்து போட்டியிடக் கூடாது என்று முடிவு செய்தோம். அதற்காக போட்டியிடும் வேட்பாளர்களை எங்களுக்குள் சீட்டுக் குலுக்கி அதில் மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்தோம்.
பதவியை ஏலமிடுவதாக குற்றம்சாட்டுவது உண்மை யில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago